Tuesday, June 21, 2011

ஒரு வெள்ளிக்கிழமையின் 25 பைசா


நீங்கள் பள்ளியில் படித்த காலங்களில் உங்களுக்கு ஒரு வெள்ளிக்கிழமையின் மதிப்பு என்னவாக இருந்திருக்கும்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக. ஆனால் எனக்கு ஒரு வெள்ளிக்கிழமையின் மதிப்பு 25 பைசா. ஒரு 25 பைசாவின் மதிப்பு இரண்டு மணிநேரம்.இரண்டு மணிநேரத்தின் மதிப்பு இரண்டு நண்பர்கள்.

அது நான் ஆறாம் வகுப்பில் வெற்றி பெற்று ஏழாம் வகுப்பில் சேர்ந்திருந்த காலம். என் ஊரிலிருந்து நான் படிக்கும் பள்ளிக்கு செல்ல வேண்டுமானால் அரைமணி நேரம் பேருந்தில் பயணம் செய்யவேண்டும். என்னுடன் என் உயிர் நண்பன் நாகராஜும், பக்கத்துவீட்டு பரமசிவமும் வருவார்கள். என் அண்ணனும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துகொண்டிருந்தான். எங்களுக்கு பேருந்து பயணம் மட்டும் இலவசம் அல்ல. ஓட்டுனர், நடத்துனர், பஸ்சுக்கு பெயிண்ட் அடித்தவன், பஞ்சர் ஒட்டியவன் மற்றும் காசு குடுத்து பயணம் செய்பவர்களிடமிருந்து கிடைக்கும் வசவுகளும் இலவசமே நண்பர்களை தவிர மற்ற எல்லோரும் எங்களை திட்டிக்கொண்டேயிருந்தனர்.

எங்கள் பள்ளி அந்த பகுதியில் பிரசித்தி பெற்ற பள்ளி. பள்ளியின் எதிரிளியே MLA ன் வீடு. பள்ளியின் பின்புறம் சினிமா தியேட்டர். ஒரு பக்கம் ஏரி, மற்றொரு பக்கம் வாரச்சந்தை. இதில் வாரச்ச்சந்தையைத்தவிர மற்ற எல்லா இடமும் எந்நேரமும் பரபரப்போடு காணப்படும்.

வாரச்ச்சந்தையும் வெள்ளிக்கிழமையானால் திருவிழாவாகிவிடும். பள்ளியின் வெளியே பலதரப்பட்ட கடைகளும் முகாமிட்டு இருக்கும். அந்த திருவிழாவை காணவே நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்காகவும் காத்துக்கொண்டிருப்பேன். அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு

1. வெள்ளிக்கிழமை வாரத்தின் கடைசி நாள். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை

2. வெள்ளிக்கிழமையன்று எனக்கு கிடைக்கும் 25 பைசா

25பைசாவிற்கு என்ன கிடைக்குமென்று நீங்கள் கேட்கலாம். 25 பைசாவிற்கு ஒரு குச்சி ஐசும், அரை டஜன் புளிப்பு மிட்டாயும், இரண்டு தேங்காய் கேக்கும், கையளவு நாவப்பழமும், சோன் பப்படியும் கிடைக்கும். இவ்வளவு கிடைத்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது அந்த பாய் கடையில் கிடைக்கும் ஐஸ் மட்டுமே. இதனால் நான் அவருக்கு ரெகுலர் கஸ்டமராக வேறு ஆகியிருந்தேன்

அன்றும் அதேபோல் ஒரு வெள்ளிக்கிழமை. பத்தாம் வகுப்பு படிக்கும் என் அண்ணன் காலை 7 மணிக்கே சென்றுவிட்டான். நானும் அந்த 25 பைசவிருக்காக காத்துக்கொண்டிருக்க என் தந்தை அளித்ததோ 1 ருபாய். என் வாழ்க்கையிலேயே எனக்கு கிடைத்த அதிகபட்ச பணத்தொகை.

இந்தா 1 ரூபா! உனக்கு 50 பைசா. அண்ணனுக்கு 50 பைசா. அவன் காலைல வாங்கிக்காம போய்ட்டான்என் தந்தை

நான் சரி என்று சொல்லிவிட்டு ஒரு ருபாய் கிதைத்த சந்தோசத்தில் பள்ளிக்கு சென்றேன், மதிய உணவு இடைவேளையில் நானும் நாகராஜும் ஆளுக்கொரு ஐஸ் வாங்கிய பின் கையில் மீதியிருந்த 50பைசாவை குடுக்க என் அண்ணனை தேடியபோதுதான் அவனை பார்த்தேன். கன்னமெல்லாம் வீங்கிப்போய் ஒரு மரத்தினடியில் நின்று விசும்பிக்கொண்டிருந்தான். அவன் பெயர் ஆறுமுகம். என் வகுப்புதான். நான் அவனிடம் அதிகம் பேசாவிட்டாலும், நாகராஜின் மூலம் அவனைப்பற்றி எனக்கு தெரிந்திருந்தது. நாகராஜிடம் கேட்டபோது ஆறுமுகத்தின் தந்தையும் தாயும் இரவு முழுதும் சண்டையிட்டு கொண்டதாகவும் அதனால் அவனுக்கு வாரக்காசு கிடைக்கவில்லை என்றும் கூறினான். எங்களுக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது. சிறிது யோசனைக்குப்பின் நான் இன்னொரு ஐஸ் வாங்கி ஆறுமுகத்திடம் குடுத்தேன். அவன் கண்களில் தற்காலிகமாக ஒரு புன்னகை பூத்திருந்தது. நானும் சிரித்துவிட்டு திரும்பினேன். எதிரில் என் அண்ணன்,

என்னடா! அப்பா காசு குடுத்தாங்களா?”

ஹ்ம்ம்! இந்தா 25 பைசாஎன் அண்ணன் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்.

மாலை 6 மணி

என் அண்ணன் மாடியில் படித்துகொண்டிருக்க, என் தந்தை எப்போதும் இல்லாமல் புதிதாக என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

அண்ணனுக்கு எவ்ளோ காசு குடுத்த?”

“50 பைச்ச்சச்ச்ச்ஸ்

ப்ளார்

உண்மைய சொல்லு.எவ்ளோ குடுத்த?” நான் உண்மையை சொல்ல அடுத்த இரண்டு மணி நேரம் எனக்கு அடி விழுந்தது. எல்லாம் முடிந்தவுடன் மறுபடியும் ஒரு கேள்வி.

இப்ப உன்ன எதுக்கு அடிச்சேன் தெரியுமா?”

“25பைசாக்கு

அதுக்கில்ல.நீ பொய் சொன்னதுக்கு, ஏமாத்துனதுக்கு

எனக்கு என்ன தெரியும் எதற்காக இந்த அடி என்று. அடி வாங்கியதில் என் மூளை வேறு கொஞ்சம் குழம்பியிருந்தது.உடம்பெல்லாம் ஒரே வலி. தவறு என்னவோ என்னுடையதுதான். இதைபோல் ஆகும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. என் அண்ணனிடம் சொல்லியிருந்தாலாவது என்னை காப்பற்றியிருப்பான். என்னை அடிக்கும்போதாவது அருகில் இருந்திருந்தால் தடுத்திருப்பான். அதுவும் இல்லை. சரி இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. என் பிரச்சினையெல்லாம் நான் அடிவாங்குவதை பார்த்த பரமசிவத்தை பற்றிதான்.அவனுக்கு ஒரு விஷயம் தெரிந்தால் அதை பள்ளிக்கே தெரியவைக்காமல் தூங்கமாட்டான். அப்படி ஒரு ஜந்து.

மறுநாள்,

நான் நினைத்ததை போலவே பரமசிவம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போதே இந்த சம்பவத்தை எல்லோருக்கும் தெரியபடுத்தியிருந்தான்.

ஆனால் எதிர்பாராவிதமாக நாகராஜும் ஆறுமுகமும் என்னிடம் பேசுவதை நிறுத்தியிருந்தனர். எனக்கு அதன் காரணம் தெரிந்திருந்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை. தவறு யார்மீது என்று கண்டுபிடிக்கவும் நான் விரும்பவில்லை. அது என் நண்பர்களின் சிறுபிள்ளைத்தனம். என் மேல் உள்ள அக்கறையாகவோ என் தந்தையின் மீது உள்ள பயமாகவோ கூட இருக்கலாம். நானும் எவ்வளவோ முயன்றும் அவர்களை என்னிடம் பேசவைக்கமுடியவில்லை. இதனால் நான் பரமசிவத்திடம் சண்டையிட்டு இருவரின் சட்டைபையும் கிழிந்ததுதான் மிச்சம்

அடுத்தடுத்த வாரங்களிலும் வெள்ளிகிழமை வந்தது. ஆனால் நான் என் தந்தையிடம் 25 பைசா வாங்குவதை நிறுத்தியிருந்தேன். என் தந்தை அடித்ததன் வலியைவிட அவர்கள் இருவரும் என்னுடன் பேசுவதை நிறுத்தியதன் வலியே எனக்குள் அதிகமாக இருந்தது.




No comments:

Post a Comment

Powered by Blogger.

Followers

About Me