தூக்கம் வராத இரவொன்றில் தேரும் சேனையும் அற்ற நகர்வலத்தில் நானே முடிசூடா மன்னன். இரவின் தனிமை மிகவும் மென்மையானது. சாலையோரத்தில் நிறுத்திவைக்கபட்டிருக்கும் வாகனங்கள், குளிரில் மேலாடையை போர்வையாக போர்த்திக்கொள்ளும் தெருவோர ஏழைச்சிறுவன், பகலிலே கல்லடிக்கு பயந்து இரவிலே தனக்கான உணவை தேடும் நாய்கள், சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் சட்டென்று தோன்றி மறையும் நிழல் இவைகளை எல்லோராலும் ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை. என்னால் முடிந்தது. இரைச்சல், அங்கும் இங்கும் ஓடித்திரியும் மனிதர்கள் இவைகளிடம் இருந்து விடைபெற்று விட்டில் பூச்சிகளின் மெல்லிய ரீங்காரத்தை தாலாட்டாக கொண்டு இரவு தனது தூக்கத்தை தொடர்ந்துகொண்டிருந்தது
சிறுவயதில் இரவில் சிறுநீர் கழிக்ககூட அம்மாவை துணைக்கழைத்த எனக்கு இரவின் மீதான ரசனை நாளடைவில் அதிகமானதின் ஊரறிந்த ரகசியத்தை தினம்தோறும் இரவிடமே கேட்கிறேன். என்னுடைய இந்த செய்கையால் எனக்கு எல்லோரிடமிருந்து அறிவுரையும் சில சமயம் வசவுகளும் கிடைத்தது. இரவெல்லாம் விழித்திருந்துவிட்டு பின்னிரவு 2 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி காலை 5 மணிக்கு வீட்டுகதவை தட்டினால் ஒரு சொம்பு தண்ணீருடன் திட்டுகளும் இலவசமே.
நான் இரவுடன் உணர்வு பரிமாற்றங்களை தொடங்கியிருந்த வேளையில் எங்கோ காற்றை கிழித்துசென்ற காரின் சத்தம் கலைத்தது. சிகரெட்டை பற்றவைத்துகொண்டே அருகில் உள்ள பெஞ்ச் மீது அமர்ந்தபோது மணி 1.25am ஆகியிருந்தது. சிறிது நேரத்தில் அவனும் அருகில் வந்தமர்ந்தான். அவனை அதற்குமுன் அந்த இடத்தில் நான் பார்த்ததில்லை. கட்டம் போட்ட சட்டையும், ஜீன்ஸ்ம் அணிந்து பார்ப்பதற்கு மேற்குடியில் பிறந்தவன்போல் இருந்தான். வயது ஒரு 25 இருக்கலாம்.
“ஹாய்! ஐ அம் முருகன்” என்றான் என்னை பார்த்து.
“சரி! இருக்கட்டும் அதுக்கென்ன இப்போ?” நான்
“என்ன சார்! கோபபட்றீங்க?” - முருகன்
“உன்ன நான் இந்த ஏரியால பாத்ததில்லையே? யார் நீ?” நான்
“என் வீடு பக்கத்துலதான் சார் . நான் இங்கவந்து ஒரு வருஷம் ஆச்சி .நான் இங்க உங்கள அடிக்கடி பாக்கறேனே…..நைட்னா அவ்ளோ பிடிக்குமா?” – முருகன்
“ஹ்ம்ம்”
“எனக்கும் நைட்னா பிடிக்கும் சார். இரவோட அழகு பகல்லதான் புரியும்” - முருகன்
பின்னர் அவன் ஏதேதோ பேசிக்கொண்டே சென்றான். மொத்தத்தில் அவனுக்கு சகமனிதர்களை பிடிக்கவில்லை என்பது தெரிந்தது. அவன் இரவை விவரித்த விதமும் பிடித்துபோனது. எங்களுக்குள் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதுபோல் தோன்றியது. நான் அவன் பேச்சில் தற்காலிகமாக மூழ்கிகொண்டிருந்தேன். உலகமெல்லாம் என்னை இழுத்துச்சென்று அந்த கேள்வியை கேட்டான்.
“சார்! இப்டி நைட்ல சுத்துறீங்களே, உங்களுக்கு பயமா இல்லையா?”
“இது எனக்கு பழக்கபட்ட ஊருதான். இங்க என்ன பயம்?” – நான்
“இல்ல சார்! பேய் அது இதுன்னு எல்லாரும் பயப்படுவாங்க…. அதான் கேட்டேன். வேற ஒண்ணுமில்ல”
“எனக்கு பேய் மேல எல்லாம் நம்பிக்கை இல்ல. பாத்த அனுபவம் உண்டு. ஆனா, அது பேயா இல்லையான்னு இதுவரைக்கும் தெரியல?” – நான்
“பாத்திருக்கீங்களா? என்ன சார் பாத்தீங்க?” - முருகன்
“அவன் மிகவும் வற்புறுத்தி கேட்டதால், நானும் அந்த சம்பவத்தை கூறினேன். எனக்கு ஒரு 12 வயது இருந்திருக்கும். எங்கள் சொந்த ஊரான மாயவரத்தின் அருகில் உள்ள ஊரில் ஓம்முருகா என்று ஒரு டூரிங் டாகீஸ் உள்ளது. தினமும் டிக்கெட் கொடுக்கும் முன் கே பி சுந்தராம்பாள் ஞானபழத்தை பிழிவார்… அதுதான் அறிகுறி……..எனக்கு டாக்கீஸை பிடித்ததோ இல்லையோ…….ஞானப்பழம் பாடல் பிடித்துப்போனது. அன்று எங்கள் ஊரில் திருவிழா. திருவிழாக்கு முன்னர் ஊர்காவல் தெய்வமான முனீஸ்வரனுக்கு பொங்கல் வைக்கவேண்டும்….அந்த கோயிலின் பெயர் பாலகரையான்…. சுருக்கமாக மண்ணுக்கு நேர்ந்துவிட்ட மாணிக்கநேசர். அதற்கும் ஆண்களே செல்லவேண்டும்…. கோழி கூவுவதற்கு முன் பொங்கல் வைத்து படைக்கவேண்டும்.
அது எங்கள் குலதேய்வமாகிபோன காரணத்தினால் நானும் என் தந்தையும் ஏதோ ஒரு படம் பார்த்துவிட்டு சிறிது விறகுகளை வெட்டிக்கொண்டு நடுரோட்டில் வந்தமர்ந்தோம், என் தந்தையின் பழைய HMT வாட்சில் மணி இரவு 1.10 காட்டியது. யாராவது ஒரு மணிக்கு பொங்கல் வைப்பார்களா? என் தந்தை அவர்களின் நண்பர்களுக்காக காத்திருக்க யாரும் வரவில்லை. தூரத்தில் ஒரு பனைமரம் ஒன்று தெரிந்தது. நான் பகலில் பார்த்து பழக்கப்பட்ட அதே ஒற்றை பனைமரம். சிறிது நேரத்தில் இன்னொரு பனைமரம் அதற்கருகில் தெரிந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக எங்களை நோக்கிவர நான் என் தந்தையிடம் என்னவென்று கேட்க….என் கண்களில் தெரிந்த பயம் என் தந்தையின் கண்களிலும் தொற்றிகொண்டது…. நானும் என் தந்தையும் அருகிலிருந்த கூரைக்குள் ஒளிந்துகொண்டோம். அந்த கருப்பு நிழல் எங்களை கடந்து குலதெய்வகோயிலை நோக்கிசென்றது.
என் தந்தை அதுதாண்டா அய்யா (முனீஸ்வரன்) . நம்ம சாமி. நீ பயப்படாத! என் கூடவே இரு என்று சமாதானம் சொல்லி என்னையும் அந்த கோவிலுக்கு அழைத்துச்சென்றார். நள்ளிரவு. ஒரு சிறிய கோபுரம். அதன் உள்ளே ஒரு சிறிய சிலை. அதற்கு நேர் எதிரே கம்பீரமாய் கையில் அரிவாளுடன் முனீஸ்வரன். சுற்றியும் தென்னை மரங்கள். எங்கள் இருவரை தவிர வேறுயாரும் இல்லை.
நாங்கள் அடுப்பை பற்றவைக்கும் முயற்சியில் 18 முறை தோற்றுப்போனோம். மண்ணெண்ணையும் உதவி செய்யவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் விழித்த வேளையில் ஒரு வயசான கிழவி எங்களை நோக்கிவந்தாள்
"இங்க என்னப்பா செய்றீங்க?” – கிழவி
“திருவிழா இல்ல, அதான் பொங்கல் வைக்கலாம்னு வந்தோம் பாட்டி” என் தந்தை
“சாமிக்கு கற்பூரம் ஏத்திட்டு வைங்கப்பா”.என்று சொல்லிவிட்டு சென்றார்.
ஞானப்பழம் சீக்கிரமாக பிழியபட்டதாலோ என்னவோ நாங்கள் கற்பூரம் வாங்கவில்லை. இப்போது எங்கே சென்று வாங்குவது. சிறிது யோசனைக்குப்பின் என் தந்தை என்னை சிலையின் கீழே உட்கார்த்தி வைத்துவிட்டு கற்பூரம் வாங்க கடைக்குசென்று. பின் கடைக்காரனை எழுப்பி வாங்கிவந்தார் போல. 10 நிமிடமாக இருந்தாலும் அன்று எனக்கு அல்லு இல்லை. பெரியவனான பின் முனீஸ்வரன்தான் கிழவி ரூபத்தில் வந்தார் என்றாரே பார்க்கலாம். யாருக்கு தெரியும். அது உண்மையாக கூட இருக்கலாம். ஏனெனில், பெண்கள் அந்த கோவிலுக்கு செல்லமாட்டார்கள். ஊருக்கு ஆகாதென்று கோவிலையே ஊர் எல்லையில் ஊரைவிட்டு வெளியே பார்த்தமாதிரி கட்டியிருப்பார்கள்
பின், நானும் பேயின் மீது ஆர்வம் கொண்டு அமானுஷ்யங்களை பற்றி படித்து ஆவியை வரவழைக்க தவளை ரத்தம், கோழி இறகு, தலைச்சன் பையன் காலடி மண், மயிர், இன்னும் பல பொருட்களை( மண்டை ஓடு கிடைக்கவில்லை. அதனால், சுடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்ட எலும்பு) சேர்த்து முயற்சிசெய்த நாளில் காய்ச்சல் வந்து படுத்துகொண்டதின் காரணம் இன்றுவரை புரியவில்லை. விஷயம் என் தந்தைக்கு தெரிந்து என்னை பேயடி அடித்துவிட்டார். எல்லாம்முடிந்தது.
முருகன் கதையை கேட்டு சிரித்துகொண்டிருந்தான்.
“சரி சார்! நீங்க பேய் இருக்குன்னு நம்புறீங்களா?” - முருகன்
"இல்லை" - நான்
“அது எப்டி சார்? கடவுள் என்ற ஒரு நல்லசக்தி இருக்கிற வரைக்கும் தீயசக்தினு ஒன்னு இருக்கும். இந்த உலகத்துல ஆசை நிறைவேறாம செத்துபோறவங்க, கடமைய சரியாக செய்யாதவர்கள், அடுத்தவன் மனைவியை புசித்தவர்கள், கணவனுக்கு துரோகம் செய்தவர்கள், செங்கோல் ஆட்சி புரிய தவறியவர்கள் எல்லோரும் பேயாக அலையணும்னு தமிழ் சாஸ்திரத்துலையே சொல்லியிருக்காங்களே. அவங்க சொல்லவரத எதாவது ஒரு ஊடகம் வழியசொல்றாங்க. அவங்க ஆசைய வேற ஒருத்தர் உடம்புல புகுந்து நிறைவேத்திக்குறாங்க. இதெல்லாம் நீங்க கேள்விப்பட்டதில்லையா?”
“அதெல்லாம் புரளி. எல்லாம் 'மாடுகண்ல MGR தெரியுறாரு' என்ற மாதிரிதான். ஒரு உடல்ல ஒரு உயிர் இருக்கிறவரைக்கும் இன்னொரு உயிர் அந்த உடல்ல போகமுடியாது. பேய் பிடிச்சிருக்குனு சொல்றதெல்லாம் ஒரு வகையான மனநோய்தான். நீ சொல்றபடி பாத்தா இங்க சாகரவங்க எல்லாம் பேயாதான் அலையணும். எனக்கு தெரிஞ்சவரைக்கும் பேயும் இல்ல, சாமியும் இல்ல” என்று கூறிவிட்டு அடுத்த சிகரெட்டை பற்றவைத்தேன்"
“சரி சார்! நீங்க பேசினதெல்லாம் கேட்டு எனக்கு தூக்கம் வருது. நாம நாளைக்கு மீட் பண்ணலாம் சார். நான் சொன்னத நீங்க சீக்கிரமே ஒத்துக்குவீங்க. இப்போ நான் கெளம்புறேன் சார். குட் நைட்” - முருகன்
அவன் சென்றதும் ஒரு இனம்புரியாத புதிய மனநிலை ஏற்பட்டது. நானும் பேயைபற்றி சிந்தித்து கொண்டே உறங்கிப்போனேன். எழுந்து பார்க்கையில் மணி மதியம் மூன்றாகிவிட்டிருந்தது.
குளித்துவிட்டு வெளியே செல்கையில்தான் கவனித்தேன். வீட்டின் சுவற்றில் ஒட்டியிருந்த போஸ்டரில், முதலாமாண்டு கண்ணீர் அஞ்சலியுடன் முருகன் சிரித்துக்கொண்டிருந்தான். அதன் பிறகு நானும் நகர்வலம் செல்வதை நிறுத்திக்கொண்டேன்.
No comments:
Post a Comment